கோலாலம்பூர், மே.05-
இந்தியா மற்றும் அமெரிக்காவில் வசிப்பவர்களைக் குறி வைத்து இணைய மோசடியில் ஈடுபடும் கும்பல் ஒன்றை, மலேசியாவில் ஆடம்பரக் குடியிருப்பு ஒன்றில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட, “Macau மோசடி” என்றழைக்கப்படும், 22 பேர் அடங்கிய அக்கும்பலில், மலேசிய பிரஜைகள், தைவான், பாகிஸ்தான் மற்றும் இந்திய பிரஜைகள் அடங்கியுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ருஸ்டி இசா தெரிவித்துள்ளார்.
மேலும், “Inspector Sunil Kumar” என்ற பெயர் குறியீட்டுடன், “Delhi Police” சீருடைகளை அணிந்து, போலீஸ் உயரதிகாரி போல் நடித்து, காணொளி அழைப்புகள் மூலம் இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதே வேளையில், ஏப்ரல் 24-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், 13 பேர் அடங்கிய கும்பல் ஒன்று அமெரிக்காவில் உள்ளவர்களை ‘காதல் வலையில்’ விழ வைக்கும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் போலீசார் கண்டறிந்து, அவர்களைக் கைது செய்துள்ளனர்.








