கோத்தா திங்கி, டிசம்பர்.21-
மலேசியாவில் எந்த நேரத்திலும் வெள்ளத்தின் இரண்டாவது அலை தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா எச்சரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள 5,000 துடிப்பான வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக பொதுப் பாதுகாப்புப் படை ஏபிஎம் அறிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளிலும் ஆற்றங்கரையோரமாகவும் வசிக்கும் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், முக்கிய ஆவணங்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் உள்ளடக்கிய Ready to Go பைகளை இப்போதே தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறும் ஏபிஎம்-மின் பயிற்சி மேளாண்மை பிரிவின் இயக்குநர் கலோனல் எஃப்பெண்டி அலி அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை மீட்கத் தேவையான படகுகள், லாரிகள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்துத் தளவாடங்களும் தயார் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டால் நிலைமையைச் சமாளிக்க மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே குடும்பத்தின் பாதுகாப்பில் ஒவ்வொரு குடிமகனும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.








