கோத்தா பாரு, ஜூன்.21-
கிளந்தான் மாநிலம் கம்போங் பாலோ அருகே உள்ள கோக் லானாஸ் பகுதியைச் சேர்ந்த இரு இளம் உறவுப் பெண்கள் நேற்று மாச்சாங் பகுதியில் பாதுகாப்பாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக ஐந்து ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் அஸுஹார் முஹமட் நோர் வெளியிட்டுள்ள தகவலில், சந்தேக நபர்கள் நேற்று மாலை மாச்சாங் பகுதியில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணையை எளிதாக்கும் வகையில், இன்று காலை மாச்சாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஐந்து பேருக்கும் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கின் முக்கிய சந்தேக நபர்களான இருவருக்கு ஐந்து நாட்கள் தடுப்புக் காவலும், மீதமுள்ள மூவருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவலும் வழங்கப்பட்டுள்ளதாக அஸுஹார் முஹமட் நோர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை காணாமல் போன இளம் பெண்களான 15 வயதான Nor Syahzanani Mohd Sulaiman மற்றும் 16 வயதான Nur Kaseh Nalisya Mohd Ramzul Nazrie ஆகியோர் நேற்று மாச்சாங் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








