ஷா ஆலாம், ஜூன்.21-
அடுத்த ஆண்டு, முதல் வகுப்பு மாணவர்களின், சேர்க்கையை சமாளிக்கும் வகையில், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 34 பள்ளிகளுக்கு புதிய ஒரு மாடி வகுப்பறை கட்டிடங்களானது, இவ்வாண்டு நவம்பர் அல்லது அதிகபட்சமாக டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சிலாங்கூர் மாநிலப் பொதுப்பணித்துறை இயக்குனர் ஷுக்ரி இஷாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், 179 மில்லியன் ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்கள் மாநிலம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பெரும்பாலான திட்டங்கள் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலையில் உள்ளதாகவும், ஒன்பது சிறிய அளவிலான திட்டங்கள் மட்டும் இன்னும் கொள்முதல் கட்டத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இந்தத் திட்டங்கள் அடுத்த கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கையை சமாளிக்கும் நோக்கில் பள்ளிகளின் வகுப்பறை வசதிகளை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் விவரித்துள்ளார்.
இதனிடையே, சில பள்ளிகளில் சுவர்கள் எழுப்பும் பணிகளும், கூரை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், சில பள்ளிகளில் இன்னும் அடித்தளப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.
கடந்த மே 5-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் அமைக்கும் பணிகளை சிலாங்கூர் பொதுப்பணித் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 102 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் இதுவரை 41 திட்டங்களுக்கு ஒப்பந்த அழைப்புகள் வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








