கோலா திரங்கானு, ஜூன்.21-
தங்கள் வீட்டிலேயே போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திரங்கானு- கம்போங் டுயோங் பெசாரில் உள்ள அவர்களின் வீட்டில் இருந்து சுமார் 1.76 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள 22 கிலோகிராம் கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திரங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் கைரி கைருடின் கூறினார். கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வரும் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு இந்த இரு நபர்களும் கிடங்கு காவலர்களாகச் செயல்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 50 வயதுடைய மூத்தவர் மீது ஏற்கனவே 13 போதைப்பொருள் வழக்குகள் உள்ளதாகவும், உலகளாவிய சந்தையை இலக்காகக் கொண்ட இந்த கஞ்சா பூக்கள், Vape திரவம் தயாரிக்கப் பயன்படுத்தப்படவிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.
இச்சோதனையில் 149,000 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-இன் கீழ் இவர்களின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முஹமட் கைரி தெரிவித்தார்.








