Jul 16, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் பள்ளி மாணவி உயிரிழப்பு: சம்பவத்திற்கு முன்பு கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டதாகத் தகவல்
தற்போதைய செய்திகள்

சிரம்பான் பள்ளி மாணவி உயிரிழப்பு: சம்பவத்திற்கு முன்பு கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டதாகத் தகவல்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.21-

சிரம்பான் செண்டாயானில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நான்காம் படிவ மாணவி, சம்பவத்திற்கு முன்பு கழிவறைக்கு செல்ல ஆசிரியரிடம் அனுமதி கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி இலாகா தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமட் அஸாம் அஹ்மாட் வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற கல்வி அறிக்கை வழங்கும் நாளில் நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அன்றைய நாளில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மற்றும் சாதனைகள் குறித்து அறிந்து கொள்ள பள்ளிக்கு வருகை புரிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் நடப்பதற்கு முன்பே மாணவியின் தந்தை பள்ளியில் இருந்ததாகவும், பின்னர் அவருக்கு மாணவி கீழே விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் முஹமட் அஸாம் தெரிவித்துள்ளார்.

மேலும், முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், 16 வயதான அம்மாணவி அன்று காலை பள்ளிக்கு சென்ற போது எந்த விதமான அசாதாரண நடத்தையையோ அல்லது மனநிலை மாற்றங்களையோ வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் விவரித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News