சைபர் ஜெயா, ஆகஸ்ட்.18-
அதிகரித்து வரும் செலவினங்களைச் சமாளிக்கும் வகையில் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஓன்-ஓஃப் one-off முறையில் நூறு ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பட்ஜெட்டுக்கான தயாரிப்புகளின் போது மாணவர்களுக்கு மீண்டும் ஒரு முறை 100 ரிங்கிட் வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 100 ரிங்கிட் உதவித் தொகை குறித்து இன்று மல்டிமீடியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
மலேசியாவில் எரிபொருள், மீ கூன், கோழி, முட்டை மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலிவாகும்.
எனினும் அதிகரித்து வரும் ஏனையப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் மாணவர்களால் பெற்றோருக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரச் சிரமத்தைக் குறைப்பது தொடர்பில் மீண்டும் ஒருமுறை 100 ரிங்கிட் வழங்கப்படலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னதாக, சைபர் ஜெயாவில் மல்டிமீடியா பல்கலைக்கழக மாணவர்களுடன் டத்தோ ஶ்ரீ அன்வார் உரையாடினார்.








