டெமர்லோ , ஆகஸ்ட் 28-
லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, டிரெய்லர் லோரியில் மோதி, தடம்புரண்டு, பாதாளத்தில் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். மூவர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 9.26 மணியளவில் பகாங், டெமர்லோ, புக்கிட் டமர், லான்சாங் முதன்மை சாலையில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் லோரியில் பயணம் செய்த 37 வயது வங்காளதேச ஆடவரும், 35 வயது பாகிஸ்தான் ஆடவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று டெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹாசன் தெரிவித்தார்.
28 வயது லோரி ஓட்டுநர், 30 வயது வங்காளதேச ஆடவர் மற்றும் 38 வயது டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஆகியோர் கடும் காயங்களுடன் டெமர்லோ, சுல்ரன் ஹாஜி அகமது ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த லோரி, Raub-பிலிருந்து குவந்தானை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி மஸ்லான் ஹாசன் தெரிவித்தார்.








