கோலாலம்பூர், ஜனவரி.23-
முன்னாள் ஆயுதப்படைத் தளபதி டான் ஶ்ரீ முஹமட் நிஸாம் ஜாஃபார் மீது, 4.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி ரோஸ்லி அஹ்மாட் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தாம் குற்றமற்றவர் என்று முஹமட் நிஸாம் வாதிட்டார்.
முஹமட் நிஸாம் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆயுதப்படை நல நிதி தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக, MACC சட்டம் 2009, பிரிவு 23-இன் கீழ், இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதே வேளையில், குற்றவியல் சட்டம், பிரிவு 409-இன் கீழ், நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டும், பிரிவு 165-இன் கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
இராணுவக் கொள்முதல் ஊழல் தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை, இரண்டு உயர் அதிகாரிகள், 4 ஆயுதப்படை வீரர்கள் உட்பட 23 பேரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நலநிதி மற்றும் தற்காப்பு அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் அடங்கும்.








