மலேசியாவின் 69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் இன்று காலை புத்ராஜெயாவிலுள்ள டத்தாரான் புத்ராஜெயாவில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா பெர்மைசூரி அகோங் ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
காலை 8 மணியளவில், விழா தளத்திற்கு வருகை புரிந்த அரச தம்பதியினரை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது மனைவி டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் மற்றும் 2026 தேசிய தினம், மலேசிய தினக் கொண்டாட்டங்களின், முதன்மைக் குழுத் தலைவர் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து தேசிய கீதமான ‘நெகாராகு’ இசைக்கப்பட்டதுடன், மலேசியக் கொடி மற்றும் ஆயுதப்படைகளின் கொடிகளை ஏந்திய 5 ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுத்துச் சென்றன.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அரச மரியாதையை ஏற்றுக் கொண்டு, சுங்கை பூலோ முகாமைச் சேர்ந்த ராயல் பீரங்கிப் படைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் கொண்ட அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.
“Malaysia Madani: Kesejahteraan Dinikmati” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இவ்வாண்டு கொண்டாட்டத்தில் 76 அணிவகுப்பு குழுக்களைச் சேர்ந்த 10,819 பேர் மற்றும் 22 இசைக் குழுக்கள் பங்கேற்றன.
மேலும், பொதுமக்களில் சுமார் 80 ஆயிரம் பேர் நேரில் கலந்து கொண்டு விழாவைக் கண்டுகளித்தனர்.
சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் வகையில், பெற்றோர் தங்களது சிறு குழந்தைகளை தள்ளுவண்டிகளில் அழைத்து வந்ததுடன், சக்கர நாற்காலிகளில் வந்த மாற்றுத் திறனாளிகளும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
பெருந்திரளான மக்கள் வருகையைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்து சீரான இயக்கத்தையும் உறுதி செய்யும் நோக்கில், இன்று அதிகாலை முதலே டத்தாரான் புத்ராஜெயாவின் சுற்றுவட்டார முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளையில், இன்று காலை நிலவிய சாதகமான வானிலை, தேசிய தினத்தைக் கொண்டாடுவதற்காக ஒன்று கூடிய மலேசியர்களிடையே உற்சாகத்தையும் தேசப்பற்றையும் மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








