2026 தேசிய தினக் கொண்டாட்டத்தில் நாட்டின் பல்வேறு வகையான ஏவுகணைகள், நீர்மூழ்கி குண்டுகள் மற்றும் போர்த் தளவாடங்கள் அணிவகுத்துச் செல்லப்பட்ட காட்சி, டத்தாரான் புத்ராஜெயாவில் திரண்டிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
உயரமான மனிதரின் அளவை விட சற்று பெரிய குண்டுகள் முதல், பெரிய சரக்கு வாகனத்தின் நீளத்துக்கு இணையான ஏவுகணைகள் வரை மலேசியாவின் நவீன ஆயுதங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, விமானங்களில் இருந்து அதிக உயரத்தில் வீசப்படும் எம்கே82 மற்றும் எம்கே83 வகை வான்வழிக் குண்டுகள் கவனத்தை ஈர்த்தன.
ஒவ்வொன்றும் சுமார் 500 கிலோ எடை கொண்ட இந்தக் குண்டுகள், இன்று நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பில் டிரெய்லர்களில் கொண்டு செல்லப்பட்டன.
அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஏவுகணைகளில் ஒன்றாக Exocet MM40 இடம் பெற்றது.
கடலில் இருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் ஏவுகணையான இது, சுமார் 6 மீட்டர் நீளம் கொண்டது.
அதேபோல், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் எக்ஸோசெட் எஸ்எம்39 (Exocet SM39) ஏவுகணையும் கிட்டத்தட்ட அதே நீளத்தைக் கொண்டதாக இருந்தது.
இவற்றுடன் பல்வேறு போர்த் தளவாடங்களும் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றை மக்கள் ஆர்வத்துடனும் வியப்புடனும் கண்டு களித்தனர்.








