காலனித்துவ ஆட்சிக் காலத்திலும், மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்பும் கொண்டு வரப்பட்ட அனைத்து சட்டங்களையும் விரிவாக மறுஆய்வு செய்து, காலத்துக்கு ஒவ்வாத சட்டங்களை நீக்கவோ அல்லது திருத்தவோ வேண்டும் என ஜசெக சட்டப் பிரிவு தலைவர் ராம்கர்பால் சிங் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் சட்டத்துறை துணை அமைச்சரான அவர், குறிப்பாக 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் முதலில் நீக்கப்பட வேண்டிய சட்டங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட பழமையான சட்டம் என்றும், கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், சாட்சியச் சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் 1956-ஆம் ஆண்டு சிவில் சட்டம் உள்ளிட்ட சுதந்திரத்திற்கு முந்தைய பிற சட்டங்களும் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என ராம்கர்பால் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு, காலாவதியான சட்ட விதிகள் நீக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டு தற்போதைய சூழலுக்கு ஏற்ப சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காலனித்துவ கால சட்டங்களை நீக்குவதன் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்கு உண்மையான அர்த்தம் அளிக்க முடியும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்ததைச் சுட்டிக் காட்டிய ராம்கர்பால், இந்தச் சட்டங்களை நீக்கும் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் 2009-ஆம் ஆண்டிலும் சிங்கப்பூர் 2021-ஆம் ஆண்டிலும் தங்களது தேச நிந்தனைச் சட்டங்களை நீக்கியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








