மூவார், அக்டோபர்.28-
கடந்த மாதம் இரண்டு வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக தனித்து வாழும் தாயார் ஒருவர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
46 வயது வுன் லீ ஃபோன் என்ற அந்த மாது நீதிபதி கைரி ஹரோன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
25 மற்றும் 61 வயதுடைய இரண்டு பெண்களுக்குச் சொந்தமான கார்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்தி சுமார் 70 ஆயிரம் ரிங்கிட் சேதத்தை விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி பின்னிரவு 12.52 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் ஹஜி ஹாசான் நிண்டுங்கில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் அந்த மாது இந்தச் செயலைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.








