பூலாவ் தியோமான் தீவில் ஒரே மாதத்தில் இரண்டு முக்குளிப்பு சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு விதிமுறைகள் அல்லது உரிம விதிகளில் கடுமையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட முக்குளிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என மலேசிய முக்குளிப்போர் சங்கமான எம்எஸ்டிஏ (MSDA) வலியுறுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பூலாவ் தியோமான், கம்போங் சாலாங் அருகே அறிமுக முக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆப்கான் நாட்டைச் சேர்ந்த 55 வயதான முஹமட் செயார் முசாஸேய் உயிரிழந்தார்.
அதற்கு முன்னதாக செப்டம்பர் 12-ம் தேதியும் இதே பகுதியில் முக்குளிப்பு நடவடிக்கைக்குப் பிறகு மற்றொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.
இந்நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் அல்லது அலட்சியமாக செயல்படும் முக்குளிப்பு நிறுவனங்களைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது என எம்எஸ்டிஏ தலைவர் அமினோர் அஸ்மி அப்துல் லாதிப் தெரிவித்துள்ளார்.
முக்குளிப்பாளர்கள் மற்றும் முக்குளிப்புப் பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மையாக இருக்க வேண்டும் என்றும், வணிக நலன்களுக்காக பாதுகாப்பில் சமரசம் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








