ரவாங், டிசம்பர்.14-
சிலாங்கூர், ஜாலான் சுங்கை புவாயாவில் நேற்று மாலை நடந்த சிறப்புச் சோதனையின் போது, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த 31 வயதுடைய பாகிஸ்தானியர் ஒருவர் போக்குவரத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொழிலாளர்களைக் கட்டுமானத் தளத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக அவர் காரணம் கூறிய நிலையில், நடத்திய சோதனையில் அவரிடம் செல்லுபடியாகும் CDL ஓட்டுநர் உரிமம் இல்லை, சாலை வரி காலாவதியாகி இருந்ததுடன், காப்பீடும் இல்லாதது தெரிய வந்ததாக சிலாங்கூர் மாநில சாலைப் போக்க்வரத்துத் துறை இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கட்டுமான நிறுவனத்தில் 'ஓட்டுனராக' பணி புரிந்து வந்த அந்த நபர் மீது ஏழு சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டு, அவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிச் செய்ய, சிலாங்கூர் ஜேபிஜே இது போன்ற சோதனைகளையும் தொடர்ச்சியான கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகிறது என அஸ்ரின் போர்ஹான் குறிப்பிட்டார்.








