பாராங், சுத்தியல் ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்திய கொள்ளைக்கும்பல் ஒன்று, கார் நிறுத்தும் இடத்தில் சுமார் 14 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றது.
இச்சம்பவம் இன்று காலை 11.22 மணியளவில் கோல கங்சார் நகரில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நிகழ்ந்தது. அப்பகுதியில் நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களை பட்டுவாடா செய்வதற்காக இரண்டு நகை வியாபார விற்பனையாளர்கள் , கார் நிறுத்தும் இடத்தில் தங்கள் காரை நிறுத்திய போது, இந்த கொள்ளைச்சம்பவம் நிகழ்ந்ததாக கோலகங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஓமார் பக்தியார் யாகோப் தெரிவித்தார்.
அந்த நகை விற்பனையாளர்களின் கார் முன் திடீரென்று தோற்றிய முகமூடி அணிந்த ஆயுதமேந்திய ஆடவர்கள் சிலர், காரின் கண்ணாடியை சுத்தியால் அடித்து நொறுக்கிவிட்டு, 14 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள நகைப்பைகளை தூக்கிக்கொண்டு அவ்விடத்திலிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதாக ஓமார் பக்தியார் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு விற்பனையாளர்கள் காயம் அடையவில்லை. இந்த கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் அதனை தனது கைப்பேசியில் பதிவு செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஓமார் பக்தியார் தெரிவித்தார்.








