சிரம்பான், ஜூன்.01-
பேருந்தில் பயணம் செய்யும் போது இருக்கை வார் அணியத் தவறிய 29 விரைவுப் பேருந்து பயணிகளுக்கு நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ அபராதம் விதித்துள்ளது . 2026 ஹஜ்ஜுப் பெருநாள் கால சிறப்பு நடவடிக்கையின் போது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 24 முதல் நேற்று வரை அதிகாரிகள் பேருந்து பயணிகளைப் போல மாறுவேடத்தில் சென்று நடத்திய சோதனையில் மொத்தம் 106 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை மீறிய பேருந்து ஓட்டுநர்களுக்கு 77 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக மாநில ஜேபிஜே இயக்குநர் Jasyindar Singh Sidhu தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வலதுபுறப் பாதையிலேயே பயணிப்பது மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை மதிக்காதது போன்ற தவறுகளுக்காக ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சோதனை காலத்தில் மொத்தம் 14,150 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு, பல்வேறு விதிமீறல்களுக்காக 1,673 வாகனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.








