Aug 13, 2026
Thisaigal NewsYouTube
வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு குறைந்த வரவேற்பு
தற்போதைய செய்திகள்

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு குறைந்த வரவேற்பு

Share:

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்காக போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்திய மானிய மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு குறைந்த வரவேற்பே கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், ஒரு மாதத்திற்குள் 20க்கும் குறைவான ஓட்டுநர்களே பங்கேற்றுள்ளதாக அவர் கூறினார்.

பெர்கேசோவுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், 85 ரிங்கிட் மதிப்பிலான மருத்துவப் பரிசோதனைக்கு வர்த்தக வாகன ஓட்டுநர்கள் 30 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டும். மீதமுள்ள 55 ரிங்கிட்டை பெர்கேசோ ஏற்றுக்கொள்கிறது.

எனினும், பல ஓட்டுநர்கள் தொடர்ந்து சாதாரண மருத்துவப் பரிசோதனை முறையையே பயன்படுத்தி வருவது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று புத்ராஜெயாவில் இன்று போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தோணி லோக் இதனை தெரிவித்தார்.

“எனவே, அதிகமானோர் தங்களது உடல்நலப் பரிசோதனையை இன்னும் விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு எதிர்பார்க்கிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பொதுவாக, ஓட்டுநர்கள் ஒரு பாரத்தை மட்டும் எடுத்துச் சென்று, அதை மருத்துவரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முழுமையான உடல்நலப் பரிசோதனை மூலம் அவர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் அல்லது மருத்துவப் பதிவுகள் உள்ளனவா என்பதை கண்டறிந்துகொள்ள முடியும்.”

40 முதல் 59 வயதுக்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் வர்த்தக வாகன ஓட்டுநர்களை உள்ளடக்குவதை இலக்காகக் கொண்டுள்ள இத்திட்டம், நாடு முழுவதும் 500 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த சலுகையை வர்த்தக வாகன ஓட்டுநர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்தோணி லோக் வலியுறுத்தினார்.

Related News