கோலாலம்பூர், செப்டம்பர்.30-
மலேசியா விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அழைப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் 47ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூருக்கு வருகை புரியவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகையை எதிர்த்து, தலைநகரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பாஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
டிரம்பின் வருகைக்கு முன்னதாகவே விரைவில் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை நடைபெறும் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
அந்த வல்லரசு நாட்டின் தலைவரால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் கட்டவிழ்க்கப்பட்ட அட்டுழீயங்களை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக டிரம்பின் வருகையை பாஸ் கட்சி, முழு வீச்சாக எதிர்க்கவிருக்கிறது என்று தக்கியுடின் குறிப்பிட்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஸ் கட்சி மட்டுமின்றி மனித அடக்குமுறையை எதித்து, அமைதியை நேசிக்கும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இயக்கங்களும் பங்கு கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.








