ஜார்ஜ்டவுன், அக்டோபர்.28-
மாற்றுத் திறனாளி மாணவன் ஒருவனைப் பிரம்பினால் அடித்துக் காயப்படுத்தியதாக இரண்டு ஆசிரியர்கள் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
பினாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் அந்த இரு ஆசிரியர்களுக்கு எதிரான வழக்கு கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சட்டத்துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இரு ஆசிரியர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வருவதற்கு போதுமான முகாந்திரங்கள் இருந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளை மீறி, இரு ஆசிரியர்களும் மிகவும் மூர்க்கத்தனமாக செயல்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சட்டத்துறை அலுவலகம் தெரிவித்தது.
சிறார்களைக் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு அந்த இரு ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.








