கோலாலம்பூர், நவம்பர்.24-
மக்களிடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயற்கை நுண்ணறிவு தவறானப் பயன்பாடுகளை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாகவும், அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று நாடாளுமன்றத்தில் பதிவுச் செய்தார்.
சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, குறிப்பாக பொதுத் தேர்தல் காலத்திற்கு முன்னதாக, மக்களைக் குழப்புவதோடு, சமுதாய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI-யைத் தவறாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது என்று அமைச்சர் கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இந்தத் தவறான செயல்பாடுகளை எதிர்கொள்ளவும், இது போன்ற சிக்கல்களைச் சமாளிக்கவும், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சட்டம், உள்ளடக்கக் கண்காணிப்பு மற்றும் இது தொடர்பான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அணுகுமுறையை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தவிர செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பான சிறப்புச் சட்ட மசோதாவை இலக்கவியல் அமைச்சு திட்டமிடும் வேளையில், செயற்கை நுண்ணறிவு அரசியலமைப்புச் சட்டத்தை இயக்கவும், செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் உள்படுத்திய வரைவுச் சட்டங்களை செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும் சிறப்புச் செயற்குழுவை இலக்கவியல் அமைச்சு உருவாக்கியுள்ளது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.








