- முகைதீனுக்கு பிரதமர் அன்வார் பதிலடி
ஆறு மாநிலங்களின் தேர்தல் முடிவை அடிப்படையாக கொண்டு தம்மை பதவி விலகும்படி தொடர்நது வலியுறுத்திக்கொண்டு இருப்பதை விட, நீதிமன்றத்தில் எதிர்நோக்கியுள்ள லஞ்ச ஊழல் வழக்கில் கவனம் செலுத்துமாறு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
நடந்து முடிந்து இருப்பது 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலாகும். ஆனால், புத்ராஜெயாவை ஆட்சி செய்வதற்கு நாடாளுமன்றத்தில் தாம் இன்னமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டு இருப்பதாக முகைதீனுக்கு அன்வார் விளக்கினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலில் பெறப்பட்ட வெற்றி மற்றும் கூட்டணி கட்சிகள் வழங்கிய தார்மீக ஆதரவை அடிப்படையாக கொண்டு, நாட்டை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வதற்கான கருத்திணக்கம், தமக்கு வழங்கப்பட்டு இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தம்மை பதவி விலகும்படி வலியுறுத்திக் கொண்டு இருப்பதை விட முகைதீன் யாசின், தாம் நீதிமன்றத்தில் எதிர்நோக்கியுள்ள குற்றவியல் வழக்கில் கவனம் செலுத்தினால் அவருக்கு பயனாக இருக்கும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.








