நாட்டின் வருமானத்தை உயர்த்தவும், மக்களுக்குப் பணச்சுமை தராமல் இருக்கவும், தற்போதுள்ள எஸ்.எஸ்.டி வரி முறையே தொடரும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இந்த வரி முறை தகுதியானவர்களை மட்டுமே சென்றடையும். பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தும் அன்றாட அடிப்படைப் பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சருமான பிரதமர் கூறியுள்ளார்.
நாட்டின் வரி முறையை மேம்படுத்த அரசாங்கம் என்ன திட்டங்களை வைத்துள்ளது என்று தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைஃபுருடின் வான் ஜான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் அன்வார் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். இந்த எஸ்.எஸ்.டி வரி முறை கடந்த 1970-களில் இருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் பயன்பாட்டில் இருப்பதால், இதனைப் பற்றி தொழில்துறையினரும் வணிகர்களும் பொதுமக்களும் ஏற்கனவே நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்று அவர் விளக்கியுள்ளார்.
மேலும், வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதன் மூலமும், வரி ஏமாற்று வேலைகளை கண்டறிந்து தடுப்பதன் மூலமும் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானம், பல்வேறு திட்டங்களின் வழி பொதுமக்களின் நன்மைகளுக்காகவே மீண்டும் பயன்படுத்தப்படும் என்றும், தற்போதைய அனைத்துலக கச்சா எண்ணெய் விநியோக நெருக்கடி போன்ற எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்துவது அவசியமாகும் என்றும் அன்வார் சுட்டிக்காட்டியுள்ளார்.








