பினாங்கு மாநிலத்திற்கு வழங்கப்படாமல் விடுபட்ட 2.8 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஜசெக மூத்த தலைவர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் கூட்டரசு அரசாங்கம் "அனைவருக்கும் நீதி" என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
2023 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பினாங்கு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்திற்குச் சராசரியாக 10.7 பில்லியன் ரிங்கிட் பங்களிப்பு வழங்கியிருந்தும், அதற்குப் பதிலாக வெறும் 7.9 பில்லியன் ரிங்கிட் மட்டுமே நிதி ஒதுக்கீடாகப் பெற்றுள்ளது என்று லிம் குவான் எங் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டரசு அரசாங்கத்திற்குத் தாங்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பை விடக் குறைவான தொகையை நிதி ஒதுக்கீடாகப் பெற்ற மாநிலங்கள் சிலாங்கூரும் பினாங்கும் மட்டுமே என்றும், கெடா போன்ற மாநிலங்கள் தங்களின் பங்களிப்பை விடக் கூடுதல் நிதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.








