கோலாலம்பூர், அக்டோபர்.04-
இஸ்ரேல் இராணுவத்தின் பிடியில் சிக்கிய குளோபல் சமுஃப் ஃபுளோதில்லா மனிதநேயக் குழுவில் இடம் பெற்று இருந்த 23 மலேசியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த 23 மலேசியர்களும் இஸ்ரேல், ரமோன் விமான நிலையத்திலிருந்து துருக்கி, இஸ்தான்புல்லை நோக்கிப் பயணமாகியுள்ளனர்.
துருக்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இஸ்தான்புல்லுக்குக் கொண்டு வரப்படுவர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பலதரப்பட்ட அரச தந்திர பேச்சுவார்த்தைகள், மற்றும் துருக்கி அதிபர் Recep Tayyip ஏற்பாடு செய்த உடன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு விமானத்தில் 23 பேரும் கொண்டு வரப்படவிருக்கின்றனர்.
இஸ்ரேல், ரமோன் விமான நிலையத்தில் உடல் நல பரிசோதனை மற்றும் இதர சோதனைகளை முடித்துக் கொண்டு அவர்கள் துருக்கி வந்தடைவர்.
இஸ்ரேல் ராணுவத்தின் அடக்குமுறை மற்றும் அழுத்தம் காரணமாக 23 மலேசியர்களும் மிகு அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் இஸ்தான்புல் வந்தடைந்ததும், முழு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவர் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








