Jun 30, 2026
Thisaigal NewsYouTube
எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது
தற்போதைய செய்திகள்

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

Share:

சிரம்பான் 2 பகுதியில் உள்ள ஜாலான் பெர்சியாரான் உத்தாமா சாலையில், ஆபத்தான முறையில் காரை எதிர் திசையில் செலுத்திய 34 வயதுப் பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பெண் தானாகவே முன்வந்து போலீசில் சரணடைந்துள்ளார்.

சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸாஹர் அப்துல் ரகீம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், சிலாங்கூரைச் சேர்ந்த அந்தச் சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை சிரம்பான் மாவட்டக் போலீஸ்துறை தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவில் சரணடைந்ததாகத் தெரிவித்தார். விசாரணையின் போது, தான் அந்தப் பகுதிக்கு முதன்முறையாக வந்ததால் வழி தெரியாமல் தவறுதலாக ஹோண்டா CR-V ரக காரை எதிர் திசையில் செலுத்தியதாக அந்தப் பெண் தன் தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சிறுநீர் பரிசோதனையில், எவ்விதப் போதைப்பொருள் பயன்பாடும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காரைச் செலுத்தியதற்காக, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 42 கீழ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விதிகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related News