வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், மெனோரா சுரங்கப்பாதையில் இருந்து ஈப்போ நோக்கிச் செல்லும் வழியில், 263.6-வது கிலோமீட்டரில் ஏற்பட்ட மண் சரிவால் 15 கி.மீ. தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.28 மணியளவில் இச்சம்பவம் பதிவான போது, இடதுபுற பாதை தற்காலிகமாக மூடப்பட்டு முதலில் 4 கி.மீ. தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற சீரமைப்புப் பணிகளால் மாலை 6.28 மணியளவில் நெரிசல் 15 கிலோ மீட்டர் வரை நீண்டது.
மேலும், மழை தொடர்ந்து பெய்து வருவதால், அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.








