பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது சபா பயணத்தை முடித்துக் கொண்டு, நாளை புதுடில்லியில் துவங்கவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா புறப்பட்டார்.
இந்தியா, மலேசியா இடையிலான வர்த்தகம், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு உறவுகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படும் இம்மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரைச் சந்தித்து அன்வார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை, கேரள மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் அன்வார், இந்தியாவின் மூத்த இஸ்லாமிய அறிஞரான கந்தாபுரம் ஏபி அபுபக்கர் முஸலியாரைச் சந்தித்து சமூக மேம்பாடு, கல்வி மற்றும் மத விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2022-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அன்வார் பிரதமராக பதவியேற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அபுபக்கர் முஸலியாரை ஏற்கனவே சந்தித்திருந்தார்
கடந்த 2023-ஆம் ஆண்டு, அபுபக்கர் முஸலியாருக்கு மலேசிய அரசாங்கம் உயரிய சமய விருது வழங்கி கௌரவித்தது.
மேலும், இந்தியப் பயணத்தை நிறைவு செய்த பின்னர் மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹமட் முய்ஸு அழைப்பின் பேரில் அன்வார் அந்நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பயணம் மலேசிய மக்களுக்கும் நாட்டிற்கும் பல்வேறு பலன்களை ஏற்படுத்தும் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








