நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களிடம் வெற்று வாக்குறுதிகளை அளிக்க தம்மால் இயலாது. மாறாக, ஓரிட மக்களின் பிரச்னைகளை முழுமையாக ஆய்வு செய்து, என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும், அதன் வாயிலாக எந்ததெந்த வகையில் மக்கள் நல்வாழ்வு பெற முடியும் என்பதை உண்மை நிலவரங்களை அடிப்படையாக கொண்டே உரிய றுதி மொழிகளை வழங்க இயலும் என்று பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோ தெளிவுபடுத்தினார்.
கோலகுபு பாரு மக்களுக்கு ஒரு நீடித்த காலத்தின் அடிப்படையில் சேவையாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ள தாம், தம்மால் நிறைவேற்ற முடிகின்ற செயல்களுக்கு மட்டுமே இதுவரையில் உறுதி மொழி வழங்கி வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
தொகுதி மக்களுக்கும், தமக்கும் இடையிலான நல்லுறவு நீடிப்பதற்கு உண்மை நிலவரத்தை மட்டுமே வாக்குறுதிகளாக தர முடியுமே தவிர இந்த தொழிற்சாலையை கெர்லிங்கிற்கு கொண்டு செல்ல முடியும், அங்குள்ள தொழிற்சாலையை இங்கு கொண்டு வர முடியும் என்று மக்களை மகிழ்விக்க இனிப்பான வாக்குறுதிகளை வழங்க இயலாது என்று பாங் சாக் தாவோ விளக்கினார்.
ஓரிட மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்பை அறிந்து, அதற்கு ஏற்றப்படி விரிவான ஆய்வு செய்ததே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று பாங் சாக் தாவோ குறிப்பிட்டார்.
கோலகுபு பாரு, கம்போங் பாசிரில் இன்று சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாங் சாக் தாவோ, செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு தொலைவில் உள்ள கோலகுபு பாரு அல்லது பத்தாங் காலி க்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும், அவசியம் ஏற்படுவதாகவும், தங்கள் பகுதியிலேயே ஒரு பல்பொருள் கடை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கெர்லிங்கில் உள்ள மக்களில் சிலர் கோரிக்கை விடுத்து இருப்பது தொடர்பில் பாங் சாக் தாவோ- விடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அதிக சிரமத்தை எதிர்நோக்க வேண்டியதில்லை. கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரஹ்மா விற்பனையை சிலாங்கூர் அரசு, தொடங்கியிருப்பதாக பாங் சாக் தாவோ தெளிவுபடுத்தினார்.
வெளியில் வாங்குவதைவிட அத்தியாவசியப் பொருட்கள் ரஹ்மா விற்பனையில் மிக மலிவாக கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளதாக பாங் சாக் தாவோ குறிப்பிட்டார்.








