புத்ராஜெயா, ஜூலை.28-
ஆறாம் படிவ கல்வி முறையை உயர்கல்வி அமைச்சின் கீழ் மாற்றும் திட்டம் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என்றும், அது தொடர்ந்து கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில், கல்வி அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஆறாம் படிவமானது பள்ளிக் கல்விக்குப் பிந்தையதும், பல்கலைக்கழகத்திற்கு முந்தையதுமான கல்வி நிலையாக இருந்தாலும், ஆசிரியர்கள், கல்வி முறை மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு தற்போது கல்வி அமைச்சே அதை நிர்வகிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஏற்பாட்டை சில ஆண்டுகள் செயல்படுத்திய பின்னர் தேவையெனில் மீண்டும் ஆய்வு செய்து, உயர்கல்வி அமைச்சின் கீழ் மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆறாம் படிவ மாணவர்களை முன்பல்கலைக்கழக மாணவர்களாகக் கருதி பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
ஆறாம் படிவ மாணவர்கள் பள்ளி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதே பள்ளி வளாகத்தில் இருந்தாலும் அவர்களுக்கு தனி கட்டிடமோ, தனி பகுதிகளோ ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர்கள் பள்ளிக் கல்வியை முடித்து, முன் பல்கலைக்கழக நிலையில் உள்ளவர்கள் என்ற உணர்வை அம்மாணவர்கள் பெறுவார்கள் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அரசாங்கத்தின் நிதியுதவி திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டதாக ஆறாம் படிவ மாணவர்கள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, இனி அவர்களுக்கும் மற்ற மாணவர்களைப் போலவே நிதியுதவிகளும், ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும் என்றும் அன்வார் அறிவித்துள்ளார்.








