கோம்பாக், டிசம்பர்.11-
சிலாங்கூர் கோம்பாக் மாவட்டத்தில் சக மாணவரிடம் பணம் கேட்டு, வெட்டுக் கத்தியால் மிரட்டியதாகக் கூறப்படும் ஓர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் படிவ மாணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிஃபின் முகமட் நாசீர் தெரிவித்தார்.
15 வயதுடைய அந்த மாணவர், தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு குற்றவியல் சட்டம் 506 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சக மாணவரிடம் பணம் கேட்டு, வெட்டுக் கத்தியைக் கொண்டு அந்த மாணவர் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.








