வரும் ஜனவரி 25 ஆம் தேதி பத்துமலை திருத்தலத்தில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவில் இந்து பெருமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பிரத்தியேக உதவித் திட்டங்களை மடானி திட்டத்தின் வாயிலாக மனித வள அமைச்சு ஏற்படுத்தியுள்ளதாக அதன் அமைச்சர் ஸ்தீவன் சிம் சீ கியோங் அறிவித்துள்ளார்.
தைப்பூச கொண்ட்டாத்தில் பங்கேற்பதற்காக வருகின்ற மூத்த குடிமக்கள், மகளிர்கள், சிறார்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் உடல் சுகவீனப்பட்டவர்கள் சற்று ஓய்வெடுத்து, இளைப்பாறுவதற்கு பத்துமலைத் திருத்தலத்தில் மனித வள அமைச்சு பிரத்தியேக கூடாரங்களை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஸ்தீவன் சிம் குறிப்பிட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை மேற்கொண்ட மனித வள அமைச்சர் ஸ்தீவன் சிம்,கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜாவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.முன்னதாக,பத்துமலைத் திருத்தலத்திறகு முதல் முறையாக வருகை புரிந்துள்ள மனித வள அமைச்சர் ஸ்தீவன் சிம்-மிற்கு தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
தைப்பூச விழாவையொட்டி மனித வள அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள இளையோர்களுக்கான தொழில் பயிற்சித் திட்டங்கள், சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் இல்லத்தரசிகளுக்கான காப்புறுதி திட்டம், மருத்துவப் பரிசோதனை உட்பட மனித வள அமைச்சின் திட்டங்கள் தொடர்பான விளக்கமளிப்பு, மற்றும் பதிவுகளும் மனித வள அமைச்சு ஏற்படுத்திய பிரத்தியேக கூடாரங்களில் நடைபெறும் என்று ஸ்தீவன் சிம் தெரிவித்தார்.
தைப்பூச விழாவில் மனித வள அமைச்சு வழங்கும் இத்தகைய வாய்ப்புகளை இந்திய சமூகம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இல்லத்தரசிகளுக்காக உருவாக்கப்பட்ட காப்புறுதி திட்டத்தில் இந்தியப்பெண்களும் தங்களை பதிவு செய்து கொண்டு பலன் பெற வேண்டும் என்று அமைச்சர் ஸ்தீவன் சிம் கேட்டுக்கொண்டுள்ளார்.








