பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவுக்கு இணங்க, உணவகங்கள் மற்றும் உணவுச் சேவைத் துறையில் நீடித்து வரும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியளித்தார்.
நேற்று செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ ரமணன், உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினையை 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்குமாறு பிரதமர் மனிதவள அமைச்சுக்கு நேரடியாக உத்தரவிட்டிருந்ததாக தெரிவித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில், மனிதவள அமைச்சு உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வங்காளதேச அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“பிரதமர் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே, அதாவது அடுத்த 20 நாட்களுக்குள் மனிதவள அமைச்சின் அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சிடம் ஆவணங்களை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று ரமணன் தெரிவித்தார்.
மேலும், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவுச் சேவைத் துறையினர் நீண்டகாலமாக எதிர்நோக்கும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே அரசின் இலக்கு என்று வலியுறுத்திய அவர், இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் நாட்டின் உணவகத் துறையின் செயல்பாடுகள் மேலும் சீரடையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.








