ஷா ஆலாம், ஆகஸ்ட்.04-
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி எரிவாயு குழாய் வெடிப்பினால் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்த சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப் பணம் உதவியை சிலாங்கூர் மாநில அரசு மேலும் 3 மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது.
தங்களின் வீடுகளை சிலாங்கூர் மாநில அரசு சீரமைக்கும் வரையில் குடியிருப்பாளர்கள் வாடகை வீடுகளில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மாதாந்திர வாடகையாக தலா 2 ஆயிரம் ரிங்கிட்டை சிலாங்கூர் அரசு வழங்கி வருகிறது.
இந்த வாடகைப் பண உதவி மேலும் 3 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த முறை வாடகைப் பணம் பட்டுவாடா செய்வதில் பெரிய சிக்கல் ஏதும் இருக்காது என்று மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார். காரணம், முதல் முறையாக அவர்கள் வாடகைப் பணம் பெறும் போதுதான், சேதமுற்ற தங்கள் குடியிருப்பு தொடர்புடைய ஆவணங்கள் கோரப்பட்டன. இப்போது அவர்கள் இயல்பாகவே பதிவில் இருப்பதால் வாடகைப் பணம் மிகச் சுலபமாக பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக அமிருடின் ஷாரி மேலும் கூறினார்.








