கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-
நாட்டில் Gig தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிக்கும் உத்தேசச் சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து, நூற்றுக்கு மேற்பட்ட Gig தொழிலாளர்கள், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிடம் மகஜர் சமர்ப்பித்தனர்.

அதே வேளையில் அரசாங்கம் முன் மொழியவிருக்கும் Gig தொழிலாளர்களின் நலன் காப்புச் சட்ட மசோதாவை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், துரோகிகள் என்று அவர்கள் வர்ணித்தனர்.
கோவிட் 19 பெருந்தொற்றுற்றுக்குப் பின்னர் ஒவ்வொரு நாட்டிலும் பொருளியல் வளர்ச்சியின் முதுகெலும்பாக விளங்கும் Gig தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதர நியாயப்பூர்வமான சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. அதற்கானச் சட்டங்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில் Gig தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நியாயப்பூர்வமான சலுகைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உட்பட இதர அனுகூலங்களை வழங்க வகை செய்யும் மடானி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருக்கும் Gig தொழிலாளர்களுக்கான உத்தேசச் சட்ட மசோதா, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று தரை பொது போக்குவரத்து உறுமாற்றுச் சங்கமான TPAD – டின் ( டிபாட்டின் ) தலைவர் எம். நாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவிருக்கும் Gig தொழிலாளர்களின் ஜீவாதாரத்தை உறுதிச் செய்யும் உத்தேசச் சட்ட மசோதாவை 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்து அதனைச் சட்டமாகக் கொண்டு வர வேண்டும். அதற்கு மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் துணை நிற்க வேண்டும் என்று நாதன் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் ஸ்டீவன் சிம்மிடம் சமர்ப்பித்த மகஜரில் அவர்கள் 5 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக தாக்கல் செய்யப்படவிருக்கும் இந்த உத்தேசச் சட்ட மசோதா, நாடு முழுவதும் உள்ள 12 லட்சம் Gig தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் அதே வேளையில் அவர்களுக்குப் பெரும் அனுகூலங்களைத் தர வல்லதாகும் என்றார்.

இந்தச் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்படுமானால் அடுத்து யார், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் Gig தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கிறது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்திய வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட Gig தொழிலாளர்கள் திரண்டிருந்தனர்.








