உலகளாவிய நிலையற்ற சூழல் காரணமாக, நாட்டில் வேலை வாய்ப்பு இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மலாக்கா மாநிலமானது வேலை தேடுபவர்களுக்கான முக்கிய இலக்காக மாறியுள்ளது.
பண்டா ஹிலிர் பகுதியில் நேற்று நடைபெற்ற திறந்த வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு நிகழ்வில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதன் மூலம் இது வெளிப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், ஜெர்மனியைச் சேர்ந்த செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தி நிறுவனம் ஒன்றின் திறந்த ஆட்சேர்ப்பு நிகழ்விற்காக அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் வேலைதேடுபவர்கள் காத்திருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து மலாக்கா மாநில சுகாதாரம், மனிதவளம் மற்றும் நல்லிணக்கத் துறை செயற்குழு உறுப்பினர் டத்தோ ங்வீ ஹீ செம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் தற்போதைய வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 2 சதவீதமாக இருப்பதுடன், இது நாட்டிலேயே மிகவும் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வேலைவாய்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் அவர்களை ஈர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மாநில அரசாங்கம், சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்தி வருவதாகவும், இதன் விளைவாகவே வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மச்சாப் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான ங்வீ ஹீ செம், சம்பந்தப்பட்ட நிறுவனம் 300 முதல் 500 வரையிலான காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கில் இந்த திறந்த நேர்முகத் தேர்வை ஏற்பாடு செய்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இந்த காலியிட பணியிடங்களில், ஆபரேட்டர், தொழில்நுட்ப நிபுணர் ஆகிய பணிகளுக்கு தொடக்க மாதச் சம்பளமாக 3,000 ரிங்கிட் வழங்கப்படுவதுடன், கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுவதால் அதிகமானோர் ஆர்வம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வு மலாக்காவின் வலுவான பொருளாதாரத்தையும், வெளிமாநில மக்களையும் ஈர்க்கும் வேலைவாய்ப்பு மையமாக மாநிலம் உருவெடுத்திருப்பதையும் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








