எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன்-ஐ நியமித்தது தொடர்பாக, பாஸ் கட்சி முறையான ஆலோசனைகளை நடத்தவில்லை என்றும், அது பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்றத்தின் முந்தைய முடிவுக்கு முரணானது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஸ் இந்த விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக பெர்சாத்து கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் டத்தோ துன் ஃபைசல் இஸ்மாயில் அஜிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் பார்ட்டி வாவாசான் நெகாரா கட்சிக்கு பெரிகாத்தான் நேஷனல் சின்னத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் அதே போன்ற முறையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த இரண்டு அறிவிப்புகளும் பெரிகாத்தான் நேஷனலின் ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்து என்ற அடிப்படை கொள்கைகளை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், கூட்டணியின் அரசியலமைப்புக்கும் முரணாக உள்ளதாக துன் ஃபைசல் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணியில் உள்ள ஓர் உறுப்புக் கட்சியின் தலைவர், ஒருதலைபட்சமாக எடுத்துள்ள முடிவுகள், பெரிக்காத்தான் உயர்மட்டக் குழுவின் முந்தைய முடிவுகளுக்கு முரணாகவும், அக்குழுவின் முடிவை முன்கூட்டியே தீர்மானிப்பவை போலவும் அமைந்திருப்பதாகவும் துன் ஃபைசல் விமர்சித்துள்ளார்.








