கோலாலம்பூர், ஜூன்.15-
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் மொத்தம் 38 ஆயிரத்து 53 பேர் நாட்டில் வேலையை இழந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேலை இழந்தவர்களில் 23 ஆயிரத்து 536 பேர் அதாவது 60.4 விழுக்காடு ஆண்கள், 15 ஆயிரத்து 417 பேர், 39.6 விழுக்காடு பெண்கள் என சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கெசோவின் வேலை வாய்ப்பு காப்பீட்டு முறையான எஸ்.ஐ.பி தரவுகள் கூறுகின்றன.
இது குறித்து மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உற்பத்தித் துறை, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், வாகன பழுதுபார்ப்பு, நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் ஆதரவு சேவைகள் போன்ற முக்கியப் பொருளாதாரத் துறைகளில் இந்த வேலை இழப்புகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப வணிகச் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.
இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பதிவான வேலை இழப்புச் சம்பவங்களை மனித வள அமைச்சு மிகக் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் புதிய வேலைகளைத் தேடுவதற்கும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் தொழிலாளர் சந்தையின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு தலையீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரமணன் விவரித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மனித வள அமைச்சு, MYFutureJobs மற்றும் Labour Market Exchange தளங்கள் மூலம் வேலை வாய்ப்புகளை இணைத்தல், பெர்கெசோ வழியாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய துறைகளை முன்கூட்டியே கண்டறிந்து விரைவான தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய மூன்று முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது.








