கோலாலம்பூர், ஜூன்.14-
உலு கிளாங் பகுதியிலுள்ள ஹைலேண்ட் டவர்ஸ் கட்டிடமானது இவ்வாண்டு இறுதிக்குள் இடிக்கப்படும் நிலையில், அதற்கான விண்ணப்பத்தை கடந்த வாரம் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இது குறித்து அம்பாங் ஜெயா நகராட்சி மன்ற துணைத் தலைவர் ஹஸ்ரோல்நிஸாம் ஷாரி வெளியிட்டுள்ள தகவலில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள அக்கட்டிடத்தை தரைமட்டமாக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டிடத்தின் உரிமையாளர்கள், திட்ட மேம்பாட்டாளர் மற்றும் மலேசிய திவால் நிர்வாகத் துறையின் பிரதிநிதிகளுடன் இணைந்து அதற்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த நகராட்சி மன்றம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1993-ஆம் ஆண்டு, டிசம்பர் 11 -ஆம் தேதி, ஹைலேண்ட் டவர்ஸ் குடியிருப்பின் 13 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.
தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட மண் அரிப்பு மற்றும் நீர் திசை திருப்பும் குழாய் வெடித்ததே இந்த பேரழிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.
இந்த விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.
இவ்விபத்தையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்த 2 மற்றும் 3-ஆம் பிளாக் கட்டிடங்களில் வசித்து வந்த குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய கட்டிட விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹைலண்ட் டவர்ஸ் கட்டிடமானது பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது.
தற்போது, 33 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட அந்த கட்டிடத்தை முழுமையாக இடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








