பெட்டாலிங் ஜெயா, ஜூன்.14-
சிலாங்கூர் மாநிலம் டெங்கிலில் உள்ள புக்கிட் துங்குல் மலைப்ப குதியில், மலையேற்றத்தின் போது வழி தவறி சிக்கிக் கொண்ட நான்கு பெண்களை, மீட்புக் குழுவினர் இன்று பத்திரமாக மீட்டுள்ளனர்.
இது குறித்து இன்று காலை 10.13 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஆறு தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணிக்காக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 25 முதல் 40 வயதிற்கும் மேற்பட்ட அந்த நான்கு பெண்களையும், அதிகாரிகளால் தொடர்பு கொள்ள முடிந்ததாகக் கூறப்படுகின்றது.
அதன் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் மூலம், நான்கு பேரும் காலை 11.30 மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மலையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.








