பகாங், ரவுப் அருகில் உள்ள பிரேசர் மலையில் இன்று சனிக்கிழமையன்று மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 43 வயது பெண்மணி ஒருவர், தவறி விழுந்து காயம் அடைந்ததுடன் அவரது கால் முறிந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இன்று நண்பகல் 12.13 மணியளவில் இந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகப் பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான பெண்மணி மேலும் 20 பயணிகள் மற்றும் மூன்று வழிகாட்டிகளுடன் மலை ஏறிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டப் பெண்ணை மீட்க ரவுப் தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்களும், பகாங் மலை வழிகாட்டி ஒருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் மலையடிவாரத்தில் இருந்து சுமார் 2.7 கிலோமீட்டர் தூரம் மேல்நோக்கிச் சென்று, பாதிக்கப்பட்டப் பெண்ணை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதாக தீயணைப்புத்துறை தெரிவித்தது.








