கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 469,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை நெகிரி செம்பிலான் அரசு சார்ந்த நீர் நிறுவனமும், மீதமுள்ள 20 சதவீதத்தை பொதுப்பணித் துறையின் பொறுப்பற்ற தன்மைக்காக மத்திய அரசும் வழங்க வேண்டும் என நீதிபதி அலாவி அப்துல் வஹாப் தீர்ப்பளித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி 12-திகதி நெகிரி செம்பிலான் - ஜாலான் தம்பின் - கிம்மாஸ் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், கார் ஓட்டிச் சென்ற நோர்ஹாமிஸா மஹாடி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்தனர். நிலத்தடி நீர் குழாய் கசிவு காரணமாகச் சாலையில் ஏற்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் கார் மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் என்று விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
நீர் குழாய்களை முறையாகப் பராமரிக்காத நீர் நிறுவனமும், தெருவிளக்குகள் இல்லாத சாலையைச் சீரமைக்காத பொதுப்பணித் துறையும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டி இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.








