Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மாணவி மரணம், நீதிக் கோருகின்றனர் பெற்றோர் கோபாலன் – மகேஸ்வரி தம்பதியர்
தற்போதைய செய்திகள்

மாணவி மரணம், நீதிக் கோருகின்றனர் பெற்றோர் கோபாலன் – மகேஸ்வரி தம்பதியர்

Share:

கிள்ளான், ஜூலை.16-

கிள்ளானில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 17 வயது மாணவியின் பெற்றோர் கோபாலன் – மகேஸ்வரி தம்பதியர், தங்கள் மகளின் மரணத்திற்கு நீதிக் கோரி போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தங்கள் மகள் உயிர் பறி போனதற்கு, அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு பள்ளி நிர்வாகம் தவறி விட்டதாக 47 வயது எம். கோபாலனும், 45 வயது P. மகேஸ்வரியும் குற்றஞ்சாட்டினர்.

கடந்த மே 27 ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பள்ளிப் பணியாளர்கள் விரைந்து செயல்படவில்லை. மாறாக கிள்ளான் பெரிய மருத்துவமனை மிக அருகாமையில் இருந்தும், அம்புலன்ஸ் வண்டியின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருப்பதற்கு முடிவு எடுத்துள்ளனர் என்று அந்தத் தம்பதியர் கூறுகின்றனர்.

பள்ளிக்கு அருகில் உள்ள கிளினிக்கிற்கு 2 நிமிடத்தில் சென்று விட முடியும். அதே வேளையில் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனைக்கு 15 நிமிடப் பயணம் தான். ஆனால், பள்ளி நிர்வாகம் தங்கள் மகளை அருகில் உள்ள கிளினிக்கிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ உடனடியாகக் கொண்டுச் செல்ல முடிவு செய்யவில்லை.

மாறாக, பள்ளியின் எஸ்ஓபி நடைமுறையின்படி, பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட மாணவியை கிளினிக்கிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ கொண்டுச் செல்ல முடியும் என்று தங்கள் மகளைப் பள்ளியிலேயே கைவிட்டனர் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கோபாலனும், மகேஸ்வரியும் தெரிவித்தனர்.

மேலும் அம்புலன்ஸ் வண்டி, பள்ளிக்கு வரும் வரையில் தங்கள் மகளைக் காப்பாற்றுவதற்காக அவசர சிகிக்சை அளிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை. அவர்கள் அமல்படுத்திய எஸ்ஓபி நடைமுறைகள் குறித்து விளக்கம் கேட்ட போது, பள்ளி நிர்வாகம் தங்களுக்கு ஒத்துழைக்கத் தவறி விட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போது தங்கள் மகள் உயிருடன் இல்லை. அவர் ஒரு வேளை மாரடைப்பினால் இறந்திருந்தால் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், பள்ளியில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் தங்கள் மகளை கிளினிக் அல்லது மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதாக தங்களுடன் தொலைபேசியில் பேசியிருந்தால் கூட தாங்கள் அனுமதி கொடுத்து இருக்க முடியும். ஆனால் பள்ளி முதல்வரோ அல்லது ஆசிரியர்களோ தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தங்கள் மகள் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு, மருத்துவமனையில் சென்றடைவதற்கு முன்னதாக உயிர் பறி போனதாக அவர்கள் சோகத்துடன் விவரித்தனர்.

தமது மகளை விஷம் குடிக்கும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படும் மூன்று மாணவர்களுக்கு எதிராக கிள்ளானில் இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு இருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இந்தச் சம்பவம் குறித்து வெளியில் எதுவும் பேசக்கூடாது என்று கூறி, சம்பவத்தை நேரில் பார்த்த மாணவிகள் பள்ளி நிர்வாகத்தினால் வாயடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பள்ளிக்கு விஷம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அதனைக் கொண்டு வந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தத் தம்பதியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே வேளையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் தங்கள் மகள் உயிர் போனதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related News