அரசாங்கத்தின் கொள்கைகள், தொழிலாளர் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மனிதவள அமைச்சுப் பொறுப்பை ஏற்றது முதல், அமைச்சு மற்றும் பெர்கேசோ தொடர்பாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரவும் போலிச் செய்திகள், உண்மையான செய்திகளைக் காட்டிலும் அதிகமான மக்களைச் சென்றடைவது அரசாங்கத்திற்கும் ஊடகத்துறைக்கும் பெரும் சவாலாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற பெர்கேசோ ஐ-லிண்டுங் யு 2026 ஊடக விருதளிப்பு விழா மற்றும் ஊடகத்தினருடனான தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஸ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.
எனவே, உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மனிதவள அமைச்சும் ஊடகத்துறையும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.
சமூக பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோவின் ஐ-லிண்டுங் யு திட்டம் குறித்து மக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊடகத்துறையாளர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.








