கெடா, சுங்கைப்பட்டாணி, ஜாலான் கோல கெட்டில் அருகிலுள்ள ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் ஆற்றில் பெண்ணின் சடலம் மிதப்பதாகப் பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து போலீஸ் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலம் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீரில் இருந்திருக்கலாம் என்றும், அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் சுமார் 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்ணாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், சடலத்தில் வெளிப்படையான காயங்களோ அல்லது உடல் கட்டப்பட்டதற்கான அடையாளங்களோ காணப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய நாளை உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கிடையே, அண்மையில் காணாமல் போன பெண்கள் தொடர்பான புகார்களுடன் மீட்கப்பட்ட சடலத்தின் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.








