புத்ராஜெயா, ஜனவரி.28-
மலேசியாவின் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் நோக்கில், அடுத்த மாதம் வரும் சீனப் புத்தாண்டு முதல் முக்கிய பண்டிகைக் காலங்கள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் ETS எனப்படும் மின்சார ரயில் சேவை, 24 மணி நேரமும் செயல்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலேசிய மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36-லிருந்து 46-ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் தீபகற்ப மலேசியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் மிகவும் நெகிழ்வான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பண்டிகைக் காலங்களில் நிலவும் அதிக தேவையைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள ரயில் பெட்டிகளை முழுமையாகப் பயன்படுத்தி, கூடுதல் பயணங்களை மேற்கொள்ளுமாறு கேடிஎம்பி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது விமான நிறுவனங்கள் நெரிசல் காலங்களில் கூடுதல் விமானங்களை இயக்குவதைப் போன்ற ஒரு நடவடிக்கையாகும்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமான இச்சேவை, தற்போது கேடிஎம்பியின் முதுகெலும்பாக மாறியுள்ளதால், பயணிகளின் வசதிக்காக இந்த 24 மணி நேரச் சேவை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








