கோலாலம்பூர், ஜனவரி.28-
மும்பையில் பிடிபட்ட "கேங் கேப்டன் பிரபா" எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் மூன்று நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இன்று நேரடியாக ஏற்றுக் கொண்டது.
இந்த வழக்கை இனி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கையாளும் என்ற குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் பலவற்றில் தேடப்பட்டு வந்த இந்த மூன்று குற்றவாளிகளும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் வளைத்து பிடிக்கப்பட்டு, இன்று காலையில் மலேசியாவிற்கு பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டனர்.
அந்த மூவரும் இன்று காலையில் சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர் என்பதையும் டத்தோ குமார் தெளிவுபடுத்தினார்.
நவீந்திரன் ராஜ் குமரேசன், ஸ்ரீதரன் சுப்ரமணியம் மற்றும் பிரதீப் குமார் செல்வராஜ் என்ற அந்த மூன்று நபர்களும் பிற்பகல் சுமார் 2.38 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிப்பாங் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த மூவரையும் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.
30 வயது மதிக்கத்தக்க அந்த மூவரும் இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அங்கு உயர்மட்டப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த அவர்கள், பின்னர் இந்திய காவல்துறையினரால் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Op Jack Sparrow நடவடிக்கையின் கீழ் தேடப்பட்டு வந்த இவர்கள், கொலை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய ஒரு குற்றக் கும்பலின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் 'கேங் 24' குழுவினரிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருப்பதோடு, கடந்த காலக் குற்றங்கள் காரணமாகப் பல எதிரிகளையும் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








