சிரம்பான், அக்டோபர்.07-
கடந்த மாதம் நிறுவனம் ஒன்றிலிருந்து விலை உயர்ந்த 62 செம்புப் பாலங்களைக் கொள்ளையிட்டதாக மூன்று நபர்கள், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
34 வயது ஆர். உதயகுமார், 50 வயது சி. நரேந்திரன் மற்றும் 24 வயது வி. நாவேந்திர நாயர் ஆகிய மூவரும் நீதிபதி டத்தின் சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நீலாய், ஜாலான் சிரம்பான்-புக்கிட் நெனாஸ் நெடுஞ்சாலை அருகில் ஒரு நிறுவனத்தில் 62 செம்புப் பாலங்களைக் கொள்ளையிட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட உதயகுமார் மற்றும் நரேந்திரன் லோரி ஓட்டுநர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








