கோலாலம்பூர், ஜனவரி.22-
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பங்சாரில் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் ஹரேஷ் டியோல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 37 வயது ஆர். கிருஷ்ணன் என்பவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை கிருஷ்ணன், கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் அய்னா அஸாரா அரிஃபின், அந்த ஆடவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி, பங்சார், ஜாலான் தெலாவி 3 -ல் உள்ள தஞ்சோங் பாலாய் குழும வளாகத்திற்கு வெளியே ஊடகவியலாளர் ஹரேஷ் டியோல் தாக்கப்பட்டார். இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் கூட்டாகச் சேர்ந்து கிருஷ்ணன் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணன், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் ஓராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.








