சிரம்பான், டிசம்பர்.10-
சிரம்பான் அருகில் ஜாலான் ராசா சாலையில் இன்று காலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமுற்ற இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
இரண்டு ஆடவர்களும் காரில் பயணித்துக் கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் காருக்குள் கிடந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் 43 வயதுடைய நபர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
காயமுற்ற மற்றொரு நபர், தற்போது சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு மெய்க்காவலரான உயிரிழந்த நபர், காரைச் செலுத்திக் கொண்டிருந்த போது இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த இருவரும் காலை 7.30 மணியளவில் காரில், போர்ட்டிக்சன் டோல் சாவடியை நெருங்கிக் கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளனர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் குண்டர் கும்பலின் பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக டத்தோ அல்ஸாஃப்னி தெரிவித்தார்.








